Wednesday, July 16, 2008

பெண்

பெண்களின் கூட்டத்தைக் கண்டு
பித்தன்
விலகி ஓடினான்.

' நீ பெண்களை வெறுப்பவனா ? '
என்று கேட்டேன்.

' இல்லை; அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கிறேன்;
பெண்
தூரத்தில் தான்
அழகாயிருக்கிறாள் ' என்றான்.


அவன் மேலும் சொன்னான்;

சொர்க்கத்தையும்
நரகத்தையும்
பூமியிலேயே நாம்
சுவைத்துப் பார்க்கவே
இறைவன்
பெண்ணைப் படைத்தான்.

நாம்
அவள் வழியாகவே
பிரவேசிக்கிறோம்
அவள் வழியாகத் தான்
வெளியேறவும் வேண்டும்.

அவள்
பொருள் புரியாத
கவிதை.
அதனால்தான்
அவள் கவர்ச்சி
மங்குவதில்லை.

அவள் தாயாகிப்
பரிபாவிக்கிறாள்
தாரமாகி
நிக்கிரகம் செய்கிறாள்.

நெருப்புக் கண்ணாடியில்
பிரதிபலிக்கும்
நம் விரோத பிம்பம்
அவள்.

நம்மை
வசீகரித்து
நம் சிறகுகளை எரிக்கும்
விளக்கு அவள்.

அழகான ஆயுதங்களால்
நம்மைத் தாக்கி
விளையாடும்
பிரியமான எதிரி
அவள்.

நம்மை
இரையாகப் பிடித்துண்ண
இருட்டு மூலைகளில்
அவள்
வலை பின்னுகிறாள்.

நம்மை
விழுங்குவதும்
உமிழ்வதுமாக
அவள்
சலிக்காமல் விளையாடுகிறாள்.

அவள் ஆகர்ஷணத்தின்
அடிமைகளாகி
அவளையே
சுற்றிச் சுழலும்
பரிதாபமான
கிரகங்கள் நாம்.

No comments: