Wednesday, July 16, 2008

நண்பர்கள்.........

இந்த உலகத்தில் யாரும்
யாருக்கும் எதிரிகள் இல்லை!!
அனைவரும் சந்தித்துக்
கொள்ளாத நண்பர்களே!!

..............................

மலைகளின் உச்சிகளுக்கு
செல்லவேண்டியிருக்கின்றது
நண்பர்களைத்தேடி.
அவர்களை இழக்கின்றபோது
மலைகளையே சுமக்கவேண்டியிருக்கின்றது.

அவனிடமே சொல்

எவன் சொன்னவன்
காதல்
இளசுகள் சம்பந்தப்பட்டதென்று
அவனிடமே
சொல்
சொல்
காதல்
இதயங்கள் சம்பந்தப்பட்டதென்று

இவன்.......

இவன் எதிர்ப்புகளை எதிர்கொண்டவன்....
"பாறைகளை எதிர்க்கவில்லையேல் ஓடைகளுக்குச்சங்கீதமில்லை" என புரிந்தவன்...

இவன் துயரங்களை ஜீரணித்தவன்...
"வெயிலை ஜீரணிப்பதால்தான் மரங்கள்
நிழல் தருகின்றன" என புதுமொழி கூறியவன்...

மற்றவரின் உதட்டசைவிற்கும் உள்ளத்தசைவிற்கும்
பொருள் புரிந்தவன்...

வார்த்தைகளினாலேயே வசியப்படுத்தும்
வசியக்காரன்...

இவனும் ஒரு தேசிங்கு ராஜன்...
மனம் என்னும் மாய பஞ்சகல்யாணி குதிரையை
அடக்கும் ஆற்றல் பெற்றிருப்பதால்...

உதிர்ந்த பூக்களையும் தன் கால்கள் படாமல்
தாண்டிச்செல்லும் இளகிய மனம் படைத்தவன்...

சிறகுகள் அடித்து பறவைகள் செத்துப் போவதில்லை...
இவனிடம் நட்பு கொண்ட எவரும் வீழ்ந்து போவதில்லை...

அலைகள் அடித்து கடற்பரப்பு காயப்படுவதில்லை...

இவனிடம் அன்பு கொண்டு எவரும் அழிந்து போவதில்லை...
அறிவு மட்டும் கொண்ட ஆண்கள்
உலர்ந்த பனையோலையில் எழுதிய கவிதைகள்...

அழகு மட்டும் கொண்ட ஆண்கள்
நிறம் மணமில்லா மலர்கள்..................

இவன் மட்டும்தான்
"அழகிய மலரில் எழுதிய கவிதை..."

ஆம்...!!! இவன் மலரில் எழுதிய கவிதை...!!!

பாட்டியின் கதை

பாட்டியின் கதை
கதைச் சொல்லிக்கொண்டே
வந்த பாட்டி
தூங்கிப்போனாள்

விழித்திருக்கிறது குழந்தை
கதாபாத்திரங்களுடன்

காத்திருக்கிறேன்...

காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
நான் காத்திருக்கிறேன்...
....
கரைந்து போகும் மணித்துளிகள்...
என் மேல் விழும் பனித்துளிகள்...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...
.....
உறங்கும் சூரியன்...
ஒளிரும் சந்திரன்...
கண் சிமிட்டும் நட்சத்திரங்கள்...
எல்லாவற்றையும் கண்டுகொண்டு...
நான் காத்திருக்கிறேன்...
நீ வருவாய் என...

.....

கையில் காசில்லை...
நீ வரவேண்டும்...
காசோடு வரவேண்டும்...
நீ தர வேண்டும்...
டீக்கடை, ஓட்டல், பெட்டிக்கடை கடன் அடைக்க...
நான் காத்திருக்கிறேன்...

நீ வருவாய் என...

நல்ல காதலி

கோட்டைத் தாண்டாதிருப்பவள்

நல்ல

மனைவியாக வாழலாம்

கோடுகளைத்தாண்ட

மறுப்பவள்

நல்ல

காதலியாக முடியாது

என்றும்

புன்முறுவல்

இதுவரை ஈட்டியது
மரணமே யென
உதடுகள் உணர்ந்த நொடியில்
பிரிக்க இயலா
மென்மையில் இறுகி
ஆனந்த சாந்தமுடன்
ஒட்டிக் கொண்டதொரு
மனம் மறைந்த
புன் முறுவல்

புன்முறுவலை புதைக்கவோ எரிக்கவோ முடியாது.

என் உடல் மலர் உதிர்ந்து
நறுமணமென பிரிந்த உயிர்
காற்றில் கரைந்த பின்னும்
வெட்ட வெளியில் ஒளிரும்
அந்த புன் முறுவல்
மகனே நானுனக்கு விட்டுச் செல்வது
புன்முறுவலை மட்டுமே

பெண்

பெண்களின் கூட்டத்தைக் கண்டு
பித்தன்
விலகி ஓடினான்.

' நீ பெண்களை வெறுப்பவனா ? '
என்று கேட்டேன்.

' இல்லை; அவர்களை
வெறுக்காமல் இருக்கவே
விலகிச் செல்கிறேன்;
பெண்
தூரத்தில் தான்
அழகாயிருக்கிறாள் ' என்றான்.


அவன் மேலும் சொன்னான்;

சொர்க்கத்தையும்
நரகத்தையும்
பூமியிலேயே நாம்
சுவைத்துப் பார்க்கவே
இறைவன்
பெண்ணைப் படைத்தான்.

நாம்
அவள் வழியாகவே
பிரவேசிக்கிறோம்
அவள் வழியாகத் தான்
வெளியேறவும் வேண்டும்.

அவள்
பொருள் புரியாத
கவிதை.
அதனால்தான்
அவள் கவர்ச்சி
மங்குவதில்லை.

அவள் தாயாகிப்
பரிபாவிக்கிறாள்
தாரமாகி
நிக்கிரகம் செய்கிறாள்.

நெருப்புக் கண்ணாடியில்
பிரதிபலிக்கும்
நம் விரோத பிம்பம்
அவள்.

நம்மை
வசீகரித்து
நம் சிறகுகளை எரிக்கும்
விளக்கு அவள்.

அழகான ஆயுதங்களால்
நம்மைத் தாக்கி
விளையாடும்
பிரியமான எதிரி
அவள்.

நம்மை
இரையாகப் பிடித்துண்ண
இருட்டு மூலைகளில்
அவள்
வலை பின்னுகிறாள்.

நம்மை
விழுங்குவதும்
உமிழ்வதுமாக
அவள்
சலிக்காமல் விளையாடுகிறாள்.

அவள் ஆகர்ஷணத்தின்
அடிமைகளாகி
அவளையே
சுற்றிச் சுழலும்
பரிதாபமான
கிரகங்கள் நாம்.

சிங்களத் தீவினுக்கோர்

சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,

சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்

வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்

மையத்து நாடுகளiல் பயிர் செய்குவோம் ....


- பாரதியார்.

புரட்சிச் சுவடுகள்

பின் விளைவுகளைச்
சிந்திப்பதென்பது உயிரின்
எல்லையோடு நின்றிருந்தால்
நாங்களும்
பின்வாங்கி இருப்போம் தான்..

ஆனால் எங்களின் பயணமோ…
தலைமுறை வீதிகளில்
நிகழ்காலத்தைய பிரச்சினைகளை
விமர்சித்தபடி தொடர இருக்கிற
தத்துவப் பயணம்..

காலவெளிச் சாலையின்
கடைசீ
எல்லைவரை எங்களின்
புரட்சிச் சுவடுகள்
புதிதாய் புதிதாய்
புதிது புதிதாய்
மேலே மேலே…

—-அறிவும‌தி—-

நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி அவருடைய ஒரு கவிதை

யாரிடம் போய்ச்சொல்லி அழ

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலம்பெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப் போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப் போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?