Wednesday, July 16, 2008

நிந்தவூரை சேர்ந்தவர் ஷிப்லி அவருடைய ஒரு கவிதை

யாரிடம் போய்ச்சொல்லி அழ

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

கனவுகளை காணவில்லை
கண்ணிரண்டில் கண்ணீர் மழை
இடம்பெயர்ந்த நாள் முதலாய்
இன்றுவரை உறக்கமில்லை

உடையிழந்தோம் உறைவிடமிழந்தோம்
உயிர் சுமந்து உணர்விழந்தோம்
உறவிழந்தோம் உணவிழந்தோம்
உடன் பிறந்தோர் பலரிழந்தோம்

புயலழித்த பூவனமாய்
புலம்பெயர்ந்தோர் நாமானோம்
உதிர்ந்த விட்ட பூவினிலே
உறைந்து போன தேனானோம்

நிலம் வீடு பிளந்ததம்மா
நூலகமும் எரிந்ததம்மா
பள்ளிகளும் கோயில்களும்
பாழ்நிலமாய்ப் போனதம்மா....

காற்தடங்கள் பதிந்த இடம்
கண்ணிவெடியில் புதைந்ததம்மா
கனிமரங்கள் துளிர்த்த இடம்
கல்லறையாய் போனதம்மா

அங்கொன்றும் இங்கொன்றாய்
உறவெல்லாம் தொலைந்ததம்மா
நிம்மதியின் நிழல் இழந்து
நெடும் பயணம் தொடர்ந்ததம்மா...

அகதி என்ற பெயர் எமக்கு
அறிமுகமாய் ஆனதம்மா
பனிமழையில் நனைந்த வாழ்க்கை
எரிமலையாய்ப் போனதம்மா

யார் செய்த சூழ்ச்சியிது?
யாரிடம் போய்ச்சொல்லுவது?
யாழ் மண்ணின் வீழ்ச்சியினை
யாரிடம் போய்ச்சொல்லுவது?

No comments: