Monday, June 9, 2008

கோடை மழை

இரத்தம் உறிஞ்சி
பளபளக்கும் உடலோடு
கழன்றுவிழுகின்றன உறவட்டைகள்...

எழுதுமேசையில்
திகிலுறுத்தும் கட்டணக்காகிதங்கள்
முதல்தேதியை முரசறைவித்தபடி...

மண்டைக்குள்
சிலந்திவலை படருமிக்காலம்
வாக்குறுதி மீறுகிறேன்
வாய்திறக்கவியலாத புத்தகங்களே!
மன்னித்துவிடுங்கள்.

கோடை தீங்கங்குகளோடு வருகிறது
அறைச்சுவர்கள் அக்கினித்தகடுகள்
நீ உவமித்தபடி
ஒரு அகதியின் கழிவிரக்கத்தை நினைவுறுத்திச்
சதா கரைந்துருகும் மின்விசிறி.

வீதியில் இறங்குகிறேன்
மாந்தளிர் விரலசைத்து
சின்னக்குமிழ் வாயால்
எச்சில் நூலிழையசெல்லமே!
நீ சிரித்துவிட்டுப்போகிறாய்.

மழையற்றும் குளிர்கிறது மண்.

No comments: