Monday, June 9, 2008

குற்றவாளி


அனலில் ஊறிய அறைகளுள்
இயலாமையுடன்
கைவிரித்துச் சுழல்கின்றன மின்விசிறிகள்.
வேம்பும் கருகிய வெளியை
உற்றுநோக்கி இருப்பவளின் கண்ணில்
எம்மரத்தின் இலையும் தளதளப்பும்
இக்கணம் அசைகிறதோ…!

அன்பின் நீரூற்றுகள்
மதவியாபாரிகளின் உதடுகளிலிருந்து
மட்டுமே பீறிடுகின்றன.

நவத்துவாரங்களிலும் தூசி இறைத்தபடி
வாகனங்கள் வெறிகொண்டலையும் வீதியோரம்
விழுந்து சுருண்டிருக்கும்
கிழவனைப் புறக்கணித்து

எலக்ரோனிக் அடிமைகளை
ஏற்றிச்செல்கின்றன
சொகுசுப் பேருந்துகள்.


தண்ணீர் தேடியலைகின்றன

கால்களுக்கிடையில் வால்நுழைத்து
எச்சில் இழையொழுகும் நாய்கள்.
எழுதியிருக்க வேண்டிய
அனைத்து வார்த்தைகளையும்
இரக்கமற்றுத் திருடிவிட்டது கோடை.

இத்தனை கொலை செய்தும்
இன்னமும்
வெளியிற்தான் திரிந்துகொண்டிருக்கிறது
வெயில்!

1 comment:

ம.கஜதீபன் said...

வணக்கம். ரவிகாந்தன்! வவுனியா மண்ணினை மணம் வீசச்செய்து கொண்டருக்கும் அன்பர்கள் குழாமில் நீங்களுமொருவர் என்பதில் சந்தோசமே!!! நானும் வவுனியா வாசிதான். உங்களிற்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பதியுங்கள். நானும் ஒரு வலைப்பதிவாளன் தான் ஆனால் புதியவன்!!

http://kajatheepan.blogspot.com